அமரர் சிவகுரு புவனேந்திரன் – 31ம் நாள் நினைவஞ்சலி – Notice

அமரர் சிவகுரு புவனேந்திரன் – 31ம் நாள் நினைவஞ்சலி

Spread the love

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு புவனேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எங்கள் அருமை சித்தப்பா உங்கள் பெருமைகளை
எங்கள் நினைவுகளில் சூடுகிறோம்..

முகம் மலர்ந்த பார்வையிலே
யுகம் புலர்ந்து போகிறது..
அகம் தளர்ந்த வேளையிலே
சோகம் கலந்து நீள்கிறது!

காலை நேரம் சேவல் கூவும்
கவலை தூற ஆவல் மேவும்!
மாலை வரும் பொன் வானம்
மாலை சூட முகத்தை தேடும்

நாரந்தனை காற்றினிலே..
நார் கோர்க்க வாழை மரங்கள்
உடல் சாய்த்து மடல் கொடுக்கும்
கடல் அலைகள் கிடு.. கிடுக்கும்!

நிரல்.. நிரலாய் முரல் மீன்கள்
குரல் முற்ற கத்துறது..
திரள்.. திரளாய் திரளி மீன்கள்
உப்பு நீரில் முட்டுறது!

தான்தோன்றி அம்மன் கோவிலிலே
மணி ஒலிகள் செவிகளிலே..
ஓயாமல் உங்கள் குரலை ஒலிக்க..
சுற்றும் பூமி சற்று நிற்கிறது!

ஒற்றை பனை மரத்தில்
நேற்றே… குருத்து விட்ட..
சின்னஞ்சிறு ஓலைகள்..
காற்றில் கீற்றிட…

தோரணங்கள் தந்த தென்னை மரம்
காரணங்கள் கேட்கிறது…
ஊர்சனங்கள் சொன்ன பின்பு
வேர் துடித்து அழுகிறது…

முகம் மலர்ந்த பார்வையிலே
யுகம் புலர்ந்து போகிறது..
அகம் தளர்ந்த வேளையிலே
சோகம் கலந்து நீள்கிறது!

நிழல் தந்த ஆலமரம்
சுழல் காற்றில் அசைவதில்லை
உமை பிரிந்த சோகத்தில் – எங்கள்
இமை காற்றில் அசைகிறது

புல்லாங்குழல் தந்த மூங்கில்கள்
புது ராகம் தேடுறது – உங்கள்
புகழ் சொல்ல தேவாரம் ஆகிறது
ஊர்.. முழுதும் பாடுறது

தேடி.. தேடி.. விழிகளில்
கூடி வரும் கண்ணீரும்
கோடி பெறுமே.. உங்கள் ஞாபக
சாலைகளில் தினம்- ஓடி வருமே

மண்வாசம் விண்மணக்க
பொன்பாசம் கண்கனக்க
ஊர் போற்ற வாழ்ந்தவரே
உத்தமரே போய் வாரும்

வட்ட நிலா விளக்கேற்ற
வண்ண தமிழ் மொழி போற்ற
பொட்டு வைத்து போறவரே
பத்திரமாய் போய் வாரும்

சந்தன பேழையிலே
நித்தியமாய் தூங்குகிற
சத்தியத்தின் நாயகனே- எங்கள்
கோமகனே போய்.. வாரும்

சிட்டுக்குருவிகள் சிறகடிக்க
பச்சைக்கிளிகள் கதைபேச
காகங்கள் கரைகிறது – எங்கள்
சோகங்கள் கரையவில்லை

மண்கிணற்றில் தவளைகள்
மனக்கிணற்றில் கவலைகள்
மணிக்கணக்கில் கத்துறதே- எங்கள்
மாணிக்கமே கேட்கிறதா

முகம் மலர்ந்த பார்வையிலே
யுகம் புலர்ந்து போகிறது
அகம் தளர்ந்த வேளையிலே
சோகம் கலந்து நீள்கிறது

“மழை தந்த வானுக்கு
பூமி சொல்லும் நன்றி
வளம் தந்த மண்ணுக்கு
பயிர்கள் சொல்லும் நன்றி
நிழல் தந்த மரங்களுக்கு
உயிர்கள் சொல்லும் நன்றி
வாழ்கை தந்த சித்தப்பாவுக்கு
நாங்கள் சொல்லும் நன்றி”

“சித்தப்பா உங்கள் சிரிப்பில்
முத்தாப்பாய் விரியும் முகத்தில்
முக்திக்கும் எங்கள் அகத்தில்
தித்திக்கும் உங்கள் ஞாபகங்களே
எத்திக்கும் எங்கள் வாழ்வின்
அரிதான பாசமுள்ள பொக்கிஷங்கள்”

உங்கள் நினைவுகளோடு வாடும்…
புவனேஸ்வரி தங்கராயாவின் பிள்ளைகள் மற்றும் பேரபிள்ளைகள்.

தகவல்: குமார் குடும்பம்(பெறாமகன்-கனடா)

மேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply